Sunday, December 16, 2007

இராமாயணம் எதிர்ப்பு – சட்டப் போராட்டம்.

இராமர் பாலம் - கற்பனை, புளுகு மூட்டையுடன் தமிழகத்தில் நுழைந்து அரசியல் செய்ய முயன்ற பார்ப்பனக் கூட்டத்தினர், தமிழக முதல்வர் கலைஞரின் கள நடவடிக்கைகளை, கருத்தியல் நடவடிக்கைகளை எதிர் கொள்ள முடியாமல், நீதிமன்றம் என்ற பாதுகாப்பு வளையத்தில் பதுங்கிக் கொண்டு, வேறு வழியில் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இதனிடையே, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேசத்தில், தந்தை பெரியார் அவர்கள் இராமாயணம் பற்றி எழுதிய ஆங்கில நூல் (Ramayan a True Reading 1957) “சச்சி இராமாயன்” என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையாவதை உ.பி முதல்வர் மாயாவதி தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் "சச்சி இராமாயண்" - நூலை எரிக்க தனது தொண்டர்களுக்கு ஆணைப் பிறப்பித்துள்ளார். வரலாற்று அறிவு சிறிதும் இல்லாத இந்த பார்ப்பன பா.ஜ.க. கூட்டமே தந்தை பெரியார் எழுதிய "சச்சி இராமாயண்” நூலின் வரலாற்றை தெரிந்துக் கொள்.

தந்தை பெரியார் அவர்கள் இராமாயணம் பற்றி எழுதிய ஆங்கில நூல் Ramayan a True Reading 1957-ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழிபெயர்ப்பான "சச்சி இராமாயண்" இராமாயணப் பாத்திரங்கள் நூல் 1968-ல் கான்பூரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் விற்பனையையும், அதன் பிரச்சார வேகத்தையும் கண்டு ஆட்டம் கண்ட பார்ப்பனக் கும்பல், இந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாக கூறி உத்தரபிரதேச அரசு 1970 ஜனவரியில் நூல்களைப் பறிமுதல் செய்து, நூலையும் தடை செய்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தோழர் லாலாபாய்சிங் யாதவ் என்பவர் அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை உயர்நீதிமன்ற "புல் பெஞ்ச்" விசாரணை செய்து, உத்தரபிரதேச அரசு விதித்த தடை உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில், இ.பி.கோ.124 ஏ. 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளைச் சுட்டிகாட்டி இ.பி.கோ. 99 ஏ பிரிவின் படி தடை உத்தரவு செல்லாது என்று பார்ப்பன பண்டார கூட்டங்களுக்குப் பதிலடி தந்தது.

பார்ப்பன-ஆர்.எஸ்.எஸ். கும்பல் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உத்தர பிரதேச அரசுக்கு நெருக்குதல் கொடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வைத்த்து. அப்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், உத்தரபிரதேச அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து "சச்சி இராமாயண்" நூலை வழக்கம் போல் விற்பனைச் செய்யலாம், பதிப்பிக்கலாம், எதற்கும் தடையில்லை என்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் (17.9.1976) வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். இத்தீர்ப்பை, நெருக்கடி கால தணிக்கை அதிகாரிகள் "விடுதலை" நாளிதழில் வெளியிட அனுமதி மறுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.

தந்தை பெரியாரின் கருத்துக்கள் எத்தனை வலிமை வாய்ந்தது என்பதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு ஒன்று போதும். பார்ப்பன - பா.ஜ.க. கும்பல் வார்த்தைகளை வெளியிடும் முன்னர், வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும். தீர்ப்பின் தமிழாக்கம்:

"இராமாயணப் பாத்திரங்கள்"/ "சச்சி இராமாயண்" மீது

தடை செல்லாது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! - 17.09.1976.

நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர்

சில வழக்குகள் சமுதாய ஒழுங்கீன முறைகேடுகளுக்கு அப்பாற்பட்டதாக முகப்பிலேயே இருக்குமென்றாலும், ஜனநாயகத்தின் அடிப்படையான சுதந்திர உரிமைகளை அசைக்கும் வழக்காக இந்த வழக்கு அமைந்துள்ளது.
இந்த மேன் முறையீட்டு வழக்கானது உத்திரப்பிரதேச அரசு பிரிவு 99 ஏ குற்ற விசாரணை முறையீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் பகுத்தறிவு இயக்கத்தின் தந்தையும் அரசியல் மேதையுமான பெரியார் (ஈ.வெ.ரா) அவர்களின் இராமாயணத்தை (Ramayan a True Reading 1957) ஆங்கிலத்திலிருந்து இந்திப் பதிப்பாக்கிய புத்தகத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட ஆணை சம்பந்தப்பட்டதால் உயர்நீதிமன்றத்தின் தனி அனுமதி பெற்று வந்திருக்கிறது.

உத்திரப்பிரதேச அரசின் முறையீட்டுப்படி இந்தப் புத்தகமானது வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு இந்திய குடிமக்களின் ஒரு பகுதியாகிய இந்துக்களுடைய உணர்ச்சிகளின் புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டுமென்று வெளியிடப்பட்டதால் இந்திய தண்டனைச் சட்டம் 295 பிரிவு (ஏ) பிரகாரம் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றம் ஆகும். இந்த அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கை சம்பந்தப்பட்ட புத்தகத்தின் ஆங்கில, இந்திப் பதிப்புகளில் குறிப்பிட்ட பக்கம், வரிகளில் உள்ள செய்திகள் சமுதாயத்தின் ஒழுக்க உணர்ச்சிகளைத் தகர்ப்பதாகத் தெரிவித்து இருக்கிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டாளரான எதிர்மனுதாரர் உயர்நீதிமன்றத்திற்கு மனு செய்து கொண்டதன் பேரில், அரசின் அறிவிப்பு ஆணையை நீதிபதிகளின் குழு ஒன்று செல்லுபடியாகாதென தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேச அரசு உயர்நீதிமன்றத்தின் தனி உரிமை பெற்று வழக்கை அதன் வழக்கறிஞரைக் கொண்டு முறையிட்டது. வழக்கறிஞரின் வாதப்படி அரசின் அறிவிப்பாணை செல்லும்படி ஆகக்கூடியது எனவும், தள்ளுபடி செய்யப்படுவதற்கான எந்தக் காரணமும் இல்லை எனவும், இந்தப் புத்தகமானது பெரும்பான்மையான இந்துக்களின் புனித உணர்ச்சிகளைப் புண்படுத்துவதாகவும், கடவுள் அவதாரங்களான இராமன், சீதை மற்றும் ஜனகன் முதலியோர்களை இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. உயர்நீதிமன்றம் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்புப்படி அரசின் அறிவிப்பு ஆணையை பிரிவு 99 ஏ குற்றமுறை விசாரணை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்களை அரசு தெளிவாக்கவில்லை என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அரசுக்கு எதிரிடையாக தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

பறிமுதல் செய்வதற்கான விளக்கம்

குற்றமுறைப் பிரிவு 99 ஏ தெளிவாக ஆராயப்பட்டால் அரசின் அறிவிப்பாணையின் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ளலாம். சட்டத்தின் கூறுகளை உற்று நோக்குங்கால், புத்தகம் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்களை, மூன்று தலைப்புகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அச்சட்டத்தின் பிரகாரம் எந்த ஒரு ஆவணமோ எந்த ஒரு செய்தியை உள்ளடக்கியிருந்தாலும், அந்தச் செய்தியானது இந்திய குடிமக்களிடேயே வேற்றுமை உணர்ச்சிகளை வளர்க்கும் விதத்திலோ, பகைமையை வளர்க்கும் விதத்திலோ இருந்தாலும், சம்பந்தப்பட்ட அரசின் கருத்தானது அவற்றை பறிமுதல் செய்யப்படுவதற்கான காரண விளக்கங்களை கொண்டிருப்பதாக இருக்கவேண்டும். அதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மாநில அரசு அறிவிப்பு ஆணையின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென உத்தரவு இடவேண்டும்.

சட்டத்தின் மூன்றாவது பிரிவாகக் காட்டப்பட்டுள்ள செய்தி விளக்கங்கள் அறிவிப்பு ஆணையில் தரப்பட்டுள்ளன என்பதனை முடிவு செய்தல் வேண்டும். உயர்நீதிமன்றம், அரசின் ஆணையில் இந்த விளக்கங்கள் தரப்படவில்லையென தள்ளுபடி செய்யப்பட்டதானது சரியில்லை என அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வாதித்து, அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் அது விளக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

நம் விருப்பத்திற்கேற்ற சட்ட விளக்கம் முறை அல்ல

மேலும் அவர் வாதிடுகையில், சம்பந்தப்பட்ட புத்தகத்தின், சம்பந்தப்பட்ட பக்கங்களில் உள்ள வரிகள் பறிமுதல் செய்யப்படுவதற்கான போதுமான விளக்கங்களோடு இருப்பதால் அரசின் அறிவிப்பு ஆணையில் இடப்பட்டுள்ள விளக்கம் தேவையில்லை எனவும், தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டார்.

அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கையில் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்கள் கூறப்பட்டு இருப்பதால் அதுவே சட்டத்தின் மூன்றாவது பகுதியைப் பூர்த்தி செய்வதாக அமைகிறது. ஆகவே, சம்பிரதாய முறைப்படி தனி விளக்கம் கூறுவது தகுதியானது அல்ல என்றும், எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் எடுத்துக்காட்டிய சட்ப்பிரிவுகளில் விளக்கங்கள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தி கூறப்பட்டிருப்பதின் காரணமாக, அவற்றை நிராகரித்துவிட்டு நம் விருப்பத்திற்கு உட்பட்ட வகையில் சட்ட விளக்கம் கூறி பறிமுதல் செய்யப்பட்டது சரியானது என வாதிடுவது முறை அல்ல. அது அடிப்படை ஜீவாதார உரிமையின் பேச்சு சுதந்திரத்தைப் பறிப்பதும் சட்டத்திற்கு புறம்பானதுமாகும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர், வெளியிடப்பட்டுள்ள சில பகுதிகள் அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் காட்டப்பட்டுள்ள மாதிரி தெய்வீகத் தன்மை வாய்ந்த இராமன், சீதை ஜனகன் முதலியவர்களை இழிவுப்படுத்தும் விதத்திலும் உத்திரப்பிரதேசத்தில் வாழும் இந்துக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையிலும் இருப்பதால் கோர்ட்டார் அவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

எங்கள் கடமை

நாங்கள் அவருடைய வாதத்தை ஆராயுங்கால் ஜீவாதார உரிமைகள் விலங்கிடப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனையும், எந்த அடிப்படை உணர்வுகளால் உந்தப்பட்டு உத்திரப்பிரதேச அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும்.

நமது இந்திய நாடானது மதச்சார்பற்ற நாடு. எந்த ஒரு மதத்தினையும் தழுவியது அல்ல. இந்த நாடானது எந்த ஒரு மக்களின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படுவதல்ல. ஆனால், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டம், ஒழுங்கு இவற்றை நிலைநாட்டுவதிலும் நாட்டங்கொண்டு அக்கறை கொண்டுள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு வகுப்பு மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும்படியான தூண்டும்படியான சொற்களைப்பற்றிக் கவலைக் கொண்டு, மூர்க்கத்தமான செயல்களை நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு அரசும் அமைதியையும், பாதுகாப்பையும் கட்டிக்காப்பது அவசியம், அப்படி அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் எந்த ஒரு வடிவிலோ பங்கம் ஏற்பட்டு ஆபத்து விளையுமேயானால் அந்த அரசு நீதித்துறையை நாட வேண்டியுள்ளது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு தவறல்ல

எங்கள் முன்னால் உள்ள அந்த மேன்முறையீட்டு வழக்கை, சட்ட ரீதியாகவும் பார்க்கின்ற நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது அல்ல. பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இது சம்பந்தப்பட்ட பிரச்னையைப் பல்வேறு விதங்களில் முடிவு செய்து தீர்ப்பளித்துள்ளது. தனிப்பட்ட ஒரு மனிதன் மீது கடுமையான நடவடிக்கை, அல்லது தடை சட்டத்தின் மூலம் கொண்டுவரப்படுமேயானால், அதனால் எற்படும் குற்ற விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99 ஏ ஏற்படுத்திய அறிஞர்கள், அரசிற்கு முன்னேற்பாடான அதிகாரங்களை வழங்கி உள்ளார்கள், சட்ட ரீதியாகச் சொல்லப்பட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியக் குடிமக்களின் இரு சாராரிடையே பகைமையை வளர்க்கும், அல்லது ஒரு மதத்தினரின் உணர்ச்சியைப் புண்படுத்தும் வெளியீடுகள் இருக்குமேயானால், சட்ட ரீதியாக அரசு இதனை உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட இந்தப் பிரிவு நிர்ப்பந்திப்பதும் அல்லாமல் 99 ஏ எந்தக் காரணத்திற்காகப் பறிமுதல் செய்யப்படுகிறது என்பதனையும் விளக்க வேண்டுமென உரைக்கிறது. எந்தக் காரணத்திற்காக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதனை கண்டிப்பாக விளக்கப்பட வேண்டுமென சட்டம் நிர்ப்பந்திப்பதால், காரணத்தை விளக்காமல், அரசு அறிவிப்பாணையில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வது கூடாது.

சட்ட ரீதியாக ஒரு பிரச்சனை கட்டாயமாக்கப்படுமேயானால், நிர்பந்திக்கப்படுமேயானால், அதன் பிரகாரம் அரசு செயல்பட்டே தீரவேண்டும், சட்டரீதியாக ஒரு வெளியீட்டை ஒரு மாநில அரசு பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்குமேயானால், அது ஒரு சாதாரண பிரச்சனை அல்ல. மிகவும் கவனாமாகச் செயல்பட வேண்டுமென்பதனை மாநில அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரச்னைகள் விடுபட்டால் சட்டம் செயலிழந்துவிடும்

இதுபோல பிரச்னைகளில் ஏதாவது ஒன்று விடுபடுமேயானால், சட்டம் அங்கு செயலிழந்துவிடுகிறது.

மன்னர் ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு நாம் திரும்பி வருகிறபோது, மக்களின் உரிமைகளை உன்னிப்பாகக் கவனிப்தோடு, பாதுகாக்கப்படுவதும் முறையானதாகும் சட்ட ரீதியாக இப்படித்தான் செய்லபட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படும்போது, அப்படிச் செய்யாமல் செயல்பட்டுவிட்டு விளக்கங்கள் கூறுவது தகுதியானதும் முறையானதும் அல்ல. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99 சி படி பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்து தடை உத்தரவைத் தகர்க்க மனு கொடுக்கும் நேரத்தில், அரசு எந்தக் காரணத்திற்காக செயல்பட்டிருக்கிறது என்பதனைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளித்தல் முறையானதாகும்.
நீதிமன்றம் அரசு அறிவிப்பாணையில் உள்ள கருத்துகளைக் கொண்டு கவனித்து, தனது எல்லைக்கு அப்பாற்பட்டு விளக்கமான விசாரணை செய்ய இயலாது, சட்ட ரீதியாகச் சில சலுகைகள் தனிப்பட்ட ஒருவருக்குக் கொடுப்பதற்குச் சட்டம் குறிப்பிட்ட அளவு இடமளிக்குமேயானால் அதனைத் தடை செய்ய, வெளியீட்டை தடை செய்ய அதிகாரம் யாருக்குமில்லை.
நாங்கள், தடைசெய்யப்படுபவரின் கருத்தை விரிவாக எடுத்துரைத்து செயல்பட வேண்டுமெனச் சொல்ல வரவில்லை. சில வழக்குகளில் குறிப்பாகச் சொல்லப்படுமேயானால், அதுவே போதுமானது. மற்ற வழக்குகளில் விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. சொல்லப்படாமல், விடப்படுமேயானால் அந்த ஆணை முறையானது அல்ல.

தனி மனித உரிமை பறிக்கப்படக் கூடாது

தனி மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை பறிக்கப்படுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 99 ஏ-யைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. தேச நலனைப் பாதுகாப்பதற்குத் தனி மனித உரிமை கட்டுப்படுத்த வேண்டுமென்பதில் அய்யமில்லை.

தனி மனித சுதந்திரத்தைப்பற்றி கோட்பாடுகள், அரசியலமைப்பில் குறிக்கப்படும்போது காரணம் பொருந்திய கட்டுப்பாடுகளை விதித்துத் தானிருக்கிறார்கள்.

குற்றமுறை பிரிவு 99 ஏ ஏற்படுத்தப்படும்போது அரசியலமைப்பை கருத்தில் கொண்டுதான் செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் நன்மையினை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அமைதியைக் காப்பதற்காக புது ஆணை பிறப்பிக்கப்படும்போது தனி மனித உரிமைபற்றிக் கவலைகொள்ளாமல் மூடத்தனமான கொள்கைகள் தடை செய்யப்பட வேண்டும். அந்த மாதிரியான வெளியீடுகள் சமுதாயத்தில் வெளியிடப்படுமேயானால், பொதுமக்களின் அமைதியையும் நன்மையையும் முன்னிட்டு தடை செய்யப்படுதல் அவசியம்.
கண்மூடித்தனமான, மூடத்தனமான கொள்கைகள் கண்டிக்கப்பட்டு பயமில்லாமல் வெளிக்காட்டப்படுமேயானால் முற்போக்கான எந்த ஒரு மாநில அரசும் முற்போக்கான பொருளாதாரக் கொள்கையையோ மேற்கண்டவாறு பயமில்லாமல் வெளிக்கொணரப்பட்ட செய்திகளையோ தடை செய்யக்கூடாது. இது தான் குற்றமுறை 99 ஏ பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கும் செய்தியாகும்.

தடை செய்வதானால் காரணகாரியத்தோடு விளக்கம் வேண்டும்

நம்முடைய அரசியல் அமைப்பு இந்த மாதிரியான பாராட்டத்தக்க கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த காரணத்தினால் கடமை தவறாது, சட்ட ரீதியாக அது கவனிக்கப்பட வேண்டுமென்பதே ஆகும்.
சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எந்த வெளியீட்டையும் தடை செய்ய அதன்மூலம் பொதுமக்களின் அமைதியைக் காக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே, குற்றமுறை 99 ஏ பிரிவின் நிர்வாகம் செயல்பட தடை செய்யப்பட வேண்டிய விஷயத்தை காரண காரியங்களோடு விளக்கப்பட வேண்டுமென்பதேயாகும். அரசின் அறிவிப்பாணை இம்முறையில் இருந்து தவறியிருக்குமேயானால் அது பிறப்பிக்கப்பட்ட ஆணையின் குற்றமேயாகும்.
முடிவாக நாங்கள் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தின் தன்மைபற்றி ஆராயவில்லை. மூடத்தனத்தில் ஊறிப்போன சிலருக்கு வளர்கின்ற சில கொள்கைகள் நகைப்பிற்குள்ளாக்குவதாக இருக்கலாம்.

அம்மாதிரியான சிலர் சுவாமி விவேகானந்தரின் எங்களுடைய மதம் அடுப்பங்கரையிலும், எங்களுடைய தெய்வம் பானைகளாகவும் இருப்பதால் எந்த மதமும் என்னைத் தொடுவதற்கு அருகதையற்றதாக இருக்கிறது என்ற சொல்லும், நான் புனிதத் தன்மையுடையவனாக இருக்கிறேன் என்று பண்டித ஜவகர்லால் நேரு தன்னுடைய (Discovery of India) என்ற புத்தகத்தில் பக்கம் 339-ல் மேற்கோளாகக் காட்டப்பட்ட செய்திகளும் புண்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்லலாம். பொதுமக்களின் நன்மையை முன்னிட்டு சில தடைகள் விதிக்கப்படுவதால் தனி மனிதனுக்கு நெருக்கடி நேரத்தில் விதிக்கப்படும் தடைகளைப்பற்றி குறிப்பிடவில்லை. அப்படியில்லாத நேரத்தில் காலத்தில் விதிக்கப்படும் தடைகளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறோம். முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டுப் புத்தகத்தைப்பற்றி, மாநில அரசு தடை விதிக்கவேண்டிய காரண காரியங்களை குற்றமுறை பிரிவு 99 ஏ பிரகாரம், நிர்பந்திக்கப்படுவதால் காட்டப்பட்டிருக்க வேண்டும்.

குற்றமுறை பிரிவு 99 ஏ பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஒவ்வொரு மாநில அரசும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி இருப்பதால், அதனைப்பற்றி தெளிவான விளக்கத்தைத் தர கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவானது பல தரப்பட்ட சமுதாயத்தையும் பல தரப்பட்ட மதத் தன்மையையும், பகுத்தறிவுவாதிகளையும், கண்முடித்தனமான மூடநம்பிக்கைக் கொண்டவர்களையும் கொண்டுள்ளது. எந்த ஒரு மாநில அரசும் இதனைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு வெளியீட்டையும் தடை செய்யும்போது முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தாது என நம்புகிறோம்.

இந்த ஒரு நடைமுறை தடையானது நெருக்கடி பிரகடனத்திற்கு முற்பட்டதாக இருப்பதால், இந்த அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம்.

No comments: