Monday, November 12, 2007

டிசம்பர் 9 :புதுச்சேரியில் தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை

தமிழ் மொழி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அறிவியல் துறையில் தமிழ்ப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிற மொழியில் உள்ள கலைச் சொற்கள் தமிழில் ஆக்கம் செய்யப்பட்டு தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் வளர்ச்சியின் உச்சம் இன்றைக்கு கணினியின் பயன்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால், கணினியில் தமிழ்ப் பயன்பாடு போதிய அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். முறையாக கணினிப் பயின்றவர்கள்கூட கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்ய மட்டுமே தெரிந்திருப்பதால் தமிழில் கணினி தொழில் நுட்பங்களை அறிந்திருக்கிறார்கள் என்றோ, பயன்படுத்துகிறார்கள் என்றோ கூறிவிட முடியாது.

தமிழ்க் கணினி என்பது முதலில் நம் கணினியைத் தமிழ்க் கணினியாக்குவது. அதாவது, கணினியின் இயங்குதளங்களைத் (Operating Systems) தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, பரவலாக்குவது. அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துவது. இரண்டாவது, கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது.

ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு போன்ற பிற மொழிகளை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கணினியில் படிக்க முடியும். தமிழை அவ்வாறு படிக்க முடியாத நிலை இருந்தது. ‘ஒருங்குறி’ எழுத்து (Unicode Font) வந்த பின் இந்த நிலை மாறி உலகம் முழுவதும் தமிழில் படிக்க முடியும், எழுத முடியும் நிலை உருவானது.

தற்போது, தமிழ் ஒருங்குறி எழுத்து வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒருங்குறி தமிழ் எழுத்தைப் பயன்படுத்திட போதிய தொழில் நுட்ப அறிமுகமோ, பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வோ தமிழர்களிடம் போதுமானதாக இல்லை. எத்தனைத் தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் விடுவோமனால் அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற நோக்கம் நிறைவேறாது.

இணைய உலகில் வலைப்பதிவுகள் (Blogs) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கணினியும் இணைய இணைப்பும் மட்டும் இருந்தால், வேறு செலவு ஏதுமின்றி, ஒருவர் தன்னுடைய கருத்துக்களை, எண்ணங்களை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இன்று வலைப்பூக்கள் மாற்று ஊடகத்திற்கு வலு சேர்த்து வருகிறது. இதில் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படுகிறது. கதை, கவிதை, குறும்படம், திரைப்பட விமர்சனம் என இலக்கியப் படைப்பும், விவாதங்களும் நிகழ்த்தப்படுகின்றன.

இதுபோன்று கணினியில் தமிழ்ப் பயன்பாட்டிற்குப் போதிய பயிற்சி இன்றியமையாதது. இந்நோக்கத்தை நிறைவேற்றவே “தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை. இதில் காலை அமர்வுகள் தமிழ்க் கணினி குறித்ததாகும். அதாவது, நமது கணினியை முழுக்க முழுக்க தமிழில் இயங்கச் செய்வது.

மதியம் அமர்வுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியதாகும். குறிப்பாக தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பூக்களில் தமிழில் எழுதுவது போன்றவற்றை எளிமையாக செய்திட தேவையான மென்பொருட்களை அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது.

மாலை நிறைவு விழாவோடு பயிற்சிப் பட்டறை நிறைவடைகிறது.

மாலை நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி அவர்கள் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.

இப்பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைக்கும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கணினித் தமிழை முன்னேடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவையான தமிழ் மென்பொருட்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய மலர் இலவசமாக வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிப் பட்டறையில் 100 மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கணினிப் பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

எனவே, பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்புவோர்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - பதிவகம்

இணையப் பக்கத்திற்குச் சென்று முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.

பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதும்.

பயிற்சிப் பட்டறை குறித்த தகவல்கள் உடனுக்குடன் கீழ்க்காணும் தளத்தில் வெளியிடப்படும்:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

அனைத்து தொடர்புகளுக்கும்:

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,
புதுச்சேரி வலைபதிவர் சிறகம்.

உலாபேசி: + 91 94431 05825
மின்ன்ஞ்சல்: rajasugumaran@gmail.com