Saturday, September 29, 2007

இந்துமத வெறி சக்திகளுக்கு சாவு மணி அடித்து சவப்பாடை ஊர்வலம்


பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 28-09-2007 அன்று, புதுச்சேரியில், இராமர் பாலம் என்ற பெயரில் தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான பார்ப்பன, இந்து மதவெறி சக்திகளுக்கு சாவு மணி அடித்து, சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முடிவில் இந்து மத வெறியன் வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

ஊர்வலத்திற்கு பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.மஞ்சினி, வெள்ளையணுக்கள் இயக்கம் சார்பில் பாவல், செம்படுகை நன்னீரகம் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் தி.க. அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன், துணைத் தலைவர் இரா.வீராசாமி, இளைஞர் அணித் தலைவர் சா.சார்லசு, செயலாளர் செ.சுரேசு, செய்தி தொடர்பாளர் ம.இளங்கோ உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டனர். ஊர்வலத்தைத் தடுத்த காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது. காவல்துறை தடுத்தையும் தாண்டி ஊர்வலத்தினர் முன்னேறி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Thursday, September 13, 2007

புதுச்சேரி, அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் தந்தை பெரியார் 129-ஆவது பிறந்த நாள் விழா

பெரியார் திராவிடர் கழகத்தின் கோட்டைமேடு கிளை சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம், வரும் 17-09-2007 திங்களன்று அரியாங்குப்பம், கோட்டைமேட்டில் நடைபெற உள்ளது.

தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்த நாள் வரும் 17-09-2007 திங்கள் அன்று தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பெரியார் தி.க. கோட்டைமேடு கிளை சார்பாக, தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் வரும் 17-09-2007 திங்கள் மாலை 6-00 மணிக்கு, அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் நடைபெற உள்ளது.

பொதுக்கூட்டத்திற்கு கோட்டைமேடு பெரியார் தி.க. பொறுப்பாளர் இரா.பெருமாள் அவர்கள் தலைமையேற்கிறார். ந.இரவி, சி.சிவமுருகன், ச.தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில இளைஞர் அணிச் செயலாளர் செ.சுரேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகின்றார்.

திரைப்பட நடிகர், கலைமாமணி திரு.குமரிமுத்து (தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க.) அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுகின்றார்.

பெரியார் தி.க. புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

மேலும் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி துணைத் தலைவர் இரா.வீராசாமி, பொருளாளர் வீரமோகன், செயலாளர் சு.விசயசங்கர், அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, இளைஞரணித் தலைவர் சா.சார்லசு, துணைச் செயலாளர் கோ.இராசேந்திரன், துணைச் செயலாளர் சிவராந்தகம் மு.சிவபெருமாள், மற்றும் பெரியார் தி.க.வின் பல்வேறு பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். நிகழச்சியின் இறுதியில் நன்றியுரை இரா.இராசசேகர் அவர்கள் கூற விழா நிறைவடைகிறது.

Tuesday, September 11, 2007

சேலம் ரயில்வே கோட்டம்...மீண்டும் அரங்கேற பார்க்கும் துரோகம்...


தமிழ்நாட்டு உரிமைக்காக தன் உயிரைத் துறக்கத் துணியும்
சட்டக் கல்லூரி மாணவர் - பெரியார் தி.க. செயல்வீரர் பன்னீர்செல்வம்.


சேலம் ரயில்வே கோட்டம், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் 50 ஆண்டுகால கோரிக்கை இது. தமிழகத்தில் இயங்கிய போத்தனூர் ரயில்வே கோட்டம், தமிழர்கள் குறட்டை விட்டு தூங்கியதால், நம் கண் முன்னே பாலக்காடு ரயில்வே கோட்டமாகி நிற்கும் கொடுமையை என்ன வென்று சொல்வது.

இந்திய அரசு தமிழர்களின் தயவில் இருப்பதால் பல நன்மைகள் கிடைத்து வருகின்றது. அவைகளில் ஒன்று தான் சேலம் கோட்டம் அமைத்தது. நீண்ட நெடிய போராட்டத்திற்குபின் அதுவும் குறிப்பாக பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக மக்களை அரசியல் இயக்கங்களை, திரட்டும் பணியில் ஈடுபட்டு அதில் இன்று முழு வெற்றியும் கண்டுள்ளார். சேலம் கோட்டம் அமைவதை எதிர்த்த மலையாளிகள் அதிலும் குறிப்பாக கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுôனந்தன், கேரளாவிற்கு எதிராக தமிழகம் கிளர்ந்தெழவதைக் கண்டு, புத்திசாலித்தனமாக, "சேலம் கோட்டத்தை எதிர்க்கவில்லை, அமைத்துக்கொள்ளுங்கள், கோவை திருப்பூரை பாலக்காடு கோட்டத்தில் இருக்க வேண்டும்" என ரொம்ப பெருந்தன்மையோடு கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் கேரளாவில் உள்ள சின்ன சின்ன ரயில்வே நிலையங்கள் கூட அனைத்து வசதிகள் உள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களான கோவை-திருப்பூரில் கூட அத்தகைய வசதி கிடையாது. தற்போதுள்ள நிலைகூட குறிப்பாக 96-க்குப் பிறகு தான் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசில் நமது தமிழககட்சிகள் பங்கு பெற்ற பிறகு தான் இத்தகைய மாற்றங்கள் உருவானது என்பது மறுக்க இயலா உண்மை.

சேலம் ரயில்வே கோட்ட விவகாரத்தில் மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரும். சேலம் ரயில்வேகோட்ட பாதுகாப்பு குழு என்ற பெயரில் ஒருங்கிணைந்து கேரளாவிற்கு எதிராக "சேலம் கோட்டத்தை தடுக்கும் கேரளாவிற்கு செல்லும் ரயில்களை தடுப்போம், சேலம் கோட்டத்தை வர விடாமல் செய்யும் மலையாளிகளுக்கு செல்லும் பொருட்களை தடுப்போம்" என போராடிவரும் வேளையில் கேரளாவிற்கு ஆதராவாகவும் தமிழ்நாட்டிற்குள் சில குரல்கள். "இப்படி செய்தால் ஒருமைப்பாடு கெட்டுப் போகாதா? இரு மாநிலங்களுக்கிடையே பகைமை வளராதா? நாமெல்லாம் இந்தியர்களில்லையா? உழைக்கும் மக்களில்லையா" என குறுக்கு சால் ஓட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தமிழகத்தை தந்திரமாக ஏமாற்றி வருகிறார்கள். சேலம் கோட்டப் பாதுகாப்புத் தலைவர் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு...

இந்தியாவை, அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் 1 2 3 இந்திய அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை தெளிவாக எதிர்ககும் மார்க்சிஸ்டுகள்,
கோவை-திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டு தொழில்நகரங்களை
கேரளாவிற்கு அடிமையாக்கும் நிலையை ஆதரிப்பது ஏன்?
இந்தியாவிற்கு ஒரு அஜென்டா..
கேரளாவிற்கு அஜென்டா..

இதைத்தான் பெரியார் சொல்வார்
"தலைக்கொரு சீயக்காய் தாடிக்கொரு சீயக்காய்"

Thursday, September 6, 2007

கோவில் நுழைவுப் போராட்டம் ; வரலாற்று உண்மைகள்

கோவில் நுழைவுப் போராட்டம் பற்றிய தவறான செய்திகள்கடந்த சில ஆண்டுகளாகவே திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றது. கோவில் நுழைவுப் போராட்டம் முதன்முதலாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்தான் நடந்தது என்றும், கோவில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி மதுரை வைத்தியநாத அய்யர்தான் என்றும் உண்மைக்கு மாறான செய்தியை ஒரு கூட்டம் பரப்பிவருகின்றது.

தந்தை பெரியார் தனது ஆரம்ப காலம் தொடங்கி மறையும்வரை சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வை ஒழிக்கின்ற வகையில் பாடுபட்டு வந்தார் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தியாகும். அதிலும் குறிப்பாக, கோவிலில் நிலவி வந்த சாதியத் தீண்டாமை ஏற்றத் தாழ்வை ஒழிக்கும் பொருட்டு தந்தை பெரியாரும் அவர்தம் சுயமரியாதை இயக்கமும் நடத்திய போராட்டங்களை யாரும் எளிதில் மறுத்துவிடவோ, மறைத்திடவோ முடியாது.

தினமணி ஸ்தாணுநாதன் எழுதிய வரலாறு படைத்த நிகழ்ச்சி என்ற கட்டுரையில் மதுரை வைத்தியநாத அய்யர் நடத்திய கோவில் நுழைவுக் கிளர்ச்சிபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் அருணன், “கடம்பவனம்” என்னும் நாவலை மார்ச் 2001-ல் வெளியிட்டு இருந்தார். அந்த நாவலில் “கதையின் கதை” என்ற தலைப்பில் முன்னுரை எழுதிய அருணன், “மீனாட்சி கோவில் ஆலயப் பிரவேசம் முதலில் மிகச் சாதாரண நிகழ்வாகப்பட்டது. சிந்திக்க சிந்திக்க மிகஅபூர்வமான விஷயமாக எழுந்தது” என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுக் கிளர்ச்சியை அறிமுகம் செய்கிறார்.

தன்னுடைய போக்கிலேயே கதை சொல்லி வந்த அருணன், கோவில் நுழைவுக் காட்சியைப் பற்றி விவரிக்கும்போது, “வெளியே திரண்டிருந்த மக்களிடம் மீனாட்சி கோவிலில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்து விட்டதாக அய்யர் அறிவித்தார். கூட்டம் பிரமாதமா கைதட்டி வரவேற்றது” என்றும், “அது நடந்தது என்றால் வரலாற்றிலேயே அப்போதுதான் நடந்தது. தமிழகத்தில் வேறெங்கும் இன்னும் நடக்காதது கடம்பவனத்தில் (மதுரையில்) நடந்தது.” (பக்:33) என்றும் எழுதுகிறார். தமிழகத்தில் முதன் முதலில் கோவில் நுழைவுப் போராட்டம் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்தியதுதான் என்று தினமணியும் திட்டமிட்டு பரப்பி வந்த புரட்டை, பொய்யான வரலாற்றை தோழர் அருணன் அவர்களும் வழி மொழிந்துள்ளார். மேலும், தீண்டாமையை ஒழித்து, எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கச் செய்திடவே மதுரை வைத்தியநாத அய்யர் உண்மையோடு, உணர்வோடு அந்தப் போரட்டத்தை நடத்தினார் என்ற வகையில் அருணன் கடம்பவனம் நவாலில் பல செய்திளை எழுதியுள்ளார்.

ஆனால், எஸ்.வி.இராசதுரை, பேராசிரியர் தொ.பரமசிவன். முனைவர் கோ.கேசவன் ஆகிய ஆய்வாளர்கள் மதுரை கோவில் நுழைவுக் கிளர்ச்சி பற்றிய தங்களது ஆய்வுகளை வெளியிட்டு உள்ளனர். அவர்களுடைய ஆய்வின்படி “காங்கிரசின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் காங்கிரசில் இராஜாஜியா? சத்தியமூர்த்தியா? (காமராஜர்) என எழுந்த கோஷ்டி மோதலில் இராஜாஜியின் செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ளவும், நெருங்கி வந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும், தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் ஆகியோரின் உற்ற துணைவன் காங்கிரஸ்தான் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் செய்கையாகவே மதுரை வைத்தியநாத அய்யரின் கோவில் நுழைவுக் கிளர்ச்சி நடந்தது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது”

இப்படி வரலாற்றுத் திரித்து எழுதும் திரிபுவதிகளின் முகமூடியைக் கிழிக்கவும், கோவில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி பெரியாரும் அவரின் சுயமரியாதை இயக்கமும் அதன் தோழர்களுமே என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துவோம். கோவில்கள் என்பது மனிதனை இழிவுபடுத்தும், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற சாதி வித்தியாசத்தை நிலைநிறுத்தும் இடமாகவும், பார்ப்பனார்கள் மட்டும் பாடுபடாமல் சோம்பேறித்தனமாக வயிறு வளர்க்க, பார்ப்பனர்கள் அல்லாதாரின் பொருளைக் கொள்ளை அடிக்க ஏற்ற இடமாகவும் இருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் சாதி வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ள இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவமான வர்ணாசிரம தர்மத்தை சத்தமின்றிப் பரப்பக்கூடிய பிரச்சார நிறுவனமாகவும் கோவில் விளங்கி வருகிறது.

கோவில் கருவறைவரை ஒரு சாதியும், உட்பிரகாரம் வரை ஒரு சாதியும், கொடிமரம் வரை ஒரு சாதியும், சுற்றுச்சுவருக்கு வெளியே ஒரு சாதியும் இருந்து வழிபாடு செய்யக்கூடிய நிலைதான் அன்று இருந்து வந்தது. இந்து மத வர்ணாசிரம தர்மத்தின்படி, பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரகர்கள், ஆகியோர் மேற்கண்டபடி கோவிலின் குறிப்பிட்ட எல்லைக்குள்தான் வழிபாடு நடத்த உரிமையிருந்தது. ஆனால், சூத்திரரில் சில பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் தீண்டப்படாதோர் கோவிலில் நுழைந்து வழிபாடு நடத்த உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. கோவிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டு கோவிலுக்கு வெளியே இருந்து கோபுரத்தை மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்த கூட்டம், இன்றைக்கு கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யும் உரிமை பெற்றது எப்போது? யாரால்? பார்ப்பனர் அல்லாதாரின் இயக்கம், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் பிரச்சார்தாலும், போராட்டத்தாலும்தான் தாழ்த்தப்பட்ட, தீண்டப்படாத மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு கோவில் நுழைவுக்கான உரிமைப்போர் முன்னெடுக்கப்பட்டது.

பார்ப்பன இந்து மதத்தால் தாழ்த்தப்பட்டோர், தீண்ட்ப்படாதோர், என ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்குச் சமூக விடுதலைப் பெற்றுத் தருவதே பெரியாரின் லட்சியமாக இருந்தது. அன்று காங்கிரசில் இருந்த பெரியார் இந்த இழிவினை போக்க 1922-ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் கோவில் நுழைவுப் பொது உரிமைகள் வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் பார்ப்பனர்களால் புறக்கணிக்கப்பட்டது.. அப்போதே கோவில் நுழைவு உரிமைக்கானப் போராட்டத்தை பெரியார் தொடங்கிவிட்டார்.

கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள பாதையில் தாழ்த்தப்பட்டோரும், தீண்டப்படாதவர்களும் நடப்தைக் தடுத்த கொடுமை 1924-ல் நடந்தது. பொது இடமான கோயிலுக்கு அருகில் உள்ள சாலைகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்பதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன.

ஒரு கட்டத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. போராடிய தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த அன்றைய தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் தலைவராக இருந்த தந்தை பெரியாரை போராட்டக் குழுவினர் அழைத்தனர்.

போராட்டத்திற்குத் தலைமையேற்ற தந்தை பெரியார் வைக்கத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். அதனாலேயே தந்தை பெரியார், வைக்கம் வீரர் எனப் புகழப்பட்டார்.

வைக்கம் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வேறு வழியின்றி பேச்சு வார்த்தைக்கு வந்தார் திருவிதாங்கூர் ராணியார். ராணியார் பெரியாரிடம் நேரடியாகப் பேசினால் பெரியாரின் புகழ் உயர்ந்து விடும் என்று பொறாமை கொண்ட ராஜாஜி, பேச்சு வார்த்தைக்கு காந்தியை அழைத்து வந்தார். ஆக 1924-ஆம் ஆண்டில் வைக்கத்தில் மீண்டும் கோவில் நுழைவு உரிமைகக்ககான முழக்கத்தைத் தந்தை பெரியார் முன் வைத்தார்.

“பொது இடங்களான கிணறு, சாலை, கோவில் போன்ற இடங்களில் பொது உரிமை இருக்க வேண்டும். தனித் தனியான உரிமைகள் கூடாது. இந்த உரிமைகள் மறுக்கின்ற இடங்களில் உரிமைகளைப் பெற வேண்டி போராட வேண்டி இருக்கும்” என்பதை தந்தை பெரியார் தனது அறிக்கைகளிலும் உரைகளிலும் பிரகடனப்படுத்தினார். வைக்கம் போராட்டத்தின் எதிரொலியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சுசீந்தரத்தில் தீண்டப்படாதார் கோவில் நுழைவுக் களர்ச்சி 1925-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்றது.


“நமது நாட்டிலே பிறப்பால் மனிதர்களாயிருந்தும், தாழ்த்தப்பட்டவர்கள், கண்ணில் தென்படக்கூடாதவர்கள், தங்கள் தெய்வங்களைத் தரிசிக்கக் கூடாதவர்கள், தங்கள் வேதத்தைப் படிக்கக் கூடாதவர்கள் என எத்தனையோ இலட்சம் பேர்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாய்களுக்கும், பன்றிகளுக்கும் கொடுத்துள்ள உரிமையைக் கூட அவர்களுக்கு அளிக்க மறுக்கின்றோம். இந்நிலையில் நமக்கு சுயராஜ்யமும் விடுதலையும் அத்தியாவசியாமா? என்பதைப் பொது மக்களே சிந்தக்க வேண்டும்.

சுசீந்திரம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சம்துவத்தை நிலை நாட்டுவதற்கேயாகம். தமிழ்நாட்டினர், வைக்கம் சத்தியாகக்கிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும், ஆட்கள் உதவியும் ஒத்தாசை செய்தார்களோ, அவ்வாறே சுசீந்திரம் சத்தியாகிரகத்திற்கும் தாங்கள் நன்கொடையளித்தும், ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறோம்” என மேற்கண்டவாறு சுசீந்திரம் கோவில் நுழைவு கிளர்ச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்து அறிக்கை ஒன்றை தந்தை பெரியார் தனது குடி அரசு (31-01-1926) மூலம் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்டினார்.

1927-ஆம் ஆண்டில் ஜே.என்.இராமநாதன் தலைமையில் பல தாழ்த்தப்பட்ட தோழர்கள் திருச்சி தாயுமானவர் கோவிலில் நுழைந்தனர். அவர்கள் மலைக்குப் படியேறிச் சென்றபொழுது பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த ரவுடிகளால் அடித்துத் தள்ளப்பட்டு, பாறைகளில் உருட்டி விடப்பட்டனர். ஜே.என்.கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலை கோவிலில் நுழைந்தவர்களை கோவிலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டனர். அவர்கள் மீது வழக்கும் போடப்பட்டது.

1927-ஆம் ஆண்டு மே மாதத்தில் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட அனைத்துச் சாதியினரும் மயிலாதுறை மயூரநாதர் கோவிலில் நுழையச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட கோவில் நிர்வாகிகள் கோவில் நுழைவாயிலையும் கருவறையையும் பூட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருப்பினும் பக்கவாட்டுக் கதவுகள் மூலமாக தோழர்கள் கோவிலினுள் நுழைந்தனர்.

அடுத்த ஆண்டு 1928-ல் திருச்சி மலைக் கோட்டையிலும் (25-06-1928) திருவானைக்காவிலும் (12-08-1928) கோவில் நுழைவுப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்போரட்டங்களில் பங்கு பெற்ற தோழர்கள் குண்டர்களால் பலமாகத் தாக்கப்பட்டனர்.

1929-ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடத் தோழர்களையும் அனுமதிக்கக வேண்டும்” என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர தந்தை பெரியார் முன்னிறுள்ளார். அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்றுள்ளார்.

பெரியார் கோவை சென்றதும், பெரியார் துணைவியார் நாகம்மையார் துணையுடன் குத்தூசி குருசாமி அவர்கள் கமிட்டியின் தீர்மானத்தை நடைமுறைபடுத்த துணிந்தார். குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் உள்ளிட்ட ஈரோடு கச்சேரி வீதி, ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து, முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துச் சென்று தேங்காய், பழம், பூ, ஆகியவை அடங்கிய தட்டுடன் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்தார். குத்தூசி குருசாமி தனது தோழர்களுடன் கோவிலுக்குள் நுழைந்ததைக் கண்ட பார்ப்பனர்கள் அந்தச் செய்தியை ஊரெங்கும் பரப்பிவிட்டனர்.

பொது மக்களின் துணையோடு குத்தூசி குருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள் இருக்கும்பொழுதே வெளிக்கதவை இழுத்து மூடி பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் கோவிலின் பூட்டிய கதவைத் திறக்க மறுத்துவிட்டனர். அந்த இரண்டு நாட்களிலும் குத்தூசி குருசாமியும் மற்ற தோழர்களும் கோவிலுக்குள்ளேயே இருந்துள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பின் தந்தை பெரியார் கோவையில் இருந்து வந்தார். அதற்குப் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமியும் மற்ற தோழர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இது பற்றிக் கூறும் போது, அந்த இரண்டு நாட்களும் நாங்கள் அன்னை நாகம்மையார் அளித்த உணவு உண்டு பசியாறினோம். ஆனால் கடவுளான ஈஸ்வரன் தான் பட்டினிகிடக்க நேரிட்டதுஎன்று குத்தூசி குருசாமி வேடிக்கைகயாககக் குறிப்பிட்டுள்ளர்.

குத்தூசிகுருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைக் கண்டித்து தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பொறுப்பிலிருந்து தந்தை பெரியார் விலகினார்.

நாடார்கள் மற்றும் தாழ்த்ப்பட்டோருக்கு கோவில் நுழையும் உரிமை அளிக்க வேண்டும் என்றும் அதற்கு விரோதமான சாஸ்திரங்களையும் ஆசார வழக்கங்களையும் மாற்ற வேண்டும்என்று தந்தை பெரியாரால் 1922-ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த தீர்மானத்தை ஆட்சேபித்து சத்தியமூர்த்தி அய்யர், மதுரை வைத்திய நாத அய்யர். கும்பகோணம்பந்தலு அய்யர், ஆகியோர் கூச்சல் போட்டுகுழப்பம் விளைவித்து, பெரும் கலகத்தையே உருவாக்கி அத்தீர்மானத்தை ஓட்டுக்கு விடாமல் அத்தீர்மானத்தின் சாரமான கோவில் நுழைவு உரிமையின் உயர்நாடியை அழித்து விட்டனர்.

1922-ஆம்ஆண்டு கோவில் நுழைவு உரிமைக்கு எதிராக கூப்பாடு போட்ட மதுரை வைத்தியநாத அய்யர் தான் கோவில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என்று தேசியத்திலகங்கள் எல்லாம் எழுதியும் பேசியும் வருகின்றனர்.

வைத்தியநாத அய்யரின் வருணாசிரம வெறியை வரலாறு பறைசாட்டுவதை மறைத்து விட்டு மனுதர்மவாதிகள் அவரை "அரிஜனத் தந்தை" என்ற அடைமொழியோடு பொய் வரலாற்றைப் புனைந்து எழுதுகிறார்கள்.

1922-ஆம் ஆண்டு கோவில் நுழைவு உரிமைக்கு எதிராக இருந்த மதுரை வைத்தியநாத அய்யர் 1939-ஆம் ஆண்டு மதுரை கோவிலில் நுழையும் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அன்று இருந்த அரசியல் சூழ்நிலை என்ன? அவரைஅந்தப் போராட்டம் நடத்தக் தூண்டிய காரணி எது?

17-ஆண்டுகளில் வைத்தியநாத அய்யரின் மனநிலை மாற்றம் அடைந்து தீண்டாமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து விட்டாரா? அதன் பின்னர் தீண்டாமைக் கொடுமையை அழிப்பதை தன் வாழ்நாளின் முக்கிய பணியாகச் செய்தாரா? இல்லை. இல்லவே இல்லை.

ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் "பெரியார் மரபும் திரிபும்" என்ற நூலில் üசுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவுகருவறை நுழைவுப் போராட்டங்கள் என்ற தலைப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த போராட்டம் பற்றி கூறியிருப்பதைப் பார்ப்போம்.

üüஅப்போது நடக்கவிருந்த மதுரை ராமநாதபுரம் ஜில்லாபோர்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதைக் கருத்தில் கொண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேர கடைசி பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களுடன் நுழைந்து, தேசிய பத்திரிகைகளின் பெரும் ஆரவாரமிக்க அங்கீகாரம், ராஜாஜியிலிருந்து காந்திவரையிலான தேசியத் தலைவர்களின் புகழ்ச்சி ஆககியவற்றைப் பெற்றுக் கொண்டார். பெரியாரால் "குள்ளநரி" என்று அழைக்கப்பட்ட மதுரை ஏ.வைத்தியநாதய்யர் தாழ்த்தப்பட்டோருக்கு கோவில் நுழைவு உரிமை என்பதை 1922-ல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதை üüதிரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்துýý தெரிந்து கொள்ளலாம்.

"இனாம் குடிகளின் உரிமையையும் இனாம்தாரி, ஜமீன்தாரி,ஒழிப்பையும்" எதிர்த்தவரும் இவர்தான் மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாதய்யர் நடத்தி வைத்த üநுழைவுý கூட அப்போது அக்கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரரின் அனுமதியாலும்இசைவின் பேரிலுமே சாத்தியமாற்று. தாழ்த்தப்பட்டவர்களை அனுமதித்ததின் காரணமாக, கருவறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோவிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான், (குடிஅரசு 16-07-1939) (நகரதூதன் 16-07-1939)
குறுகிய அரசியல் இலாபத்திற்காக, தாழ்த்தப்பட்டோரின் உயிரான உரிமைப் பிரச்சனையை பகடைக் காயாக பயன்படுத்தி விளையாடிய, மதுரை வைத்தியநாத அய்யர் கோவில் நுழைவுப்போராட்டத்தின் முன்னோடி என்று கூறுவது அயோக்கியத்தனமானது என்பதை வரலாற்று ஆய்வுகள் நிரூப்பிக்கின்றது.ஆனால், குத்தூசி குருசாமி நடத்தியகோவில் நுழைவுப் போராட்டம் என்பது, ஏற்றுக் கொண்ட கொள்கை வழிப்பட்ட போராட்டம்.
ஏற்றத்தாழ்வை ஒழித்து சம உரிமைபெற வேண்டி நடந்த சமதர்மப் போராட்டம். உண்மையான உணர்வோடு, உறுதியான உந்துதலோடு ஒடுக்கப்பட்டோரின் உரிமை பெற நடந்த போராட்டம்.

தன் வாழ்நாள் முழுவதும் அந்த உரிமைப் போருக்குத் தன்னையே ஒப்படைத்த சுயமரியாதைப் போராளியின் எழுச்சிப் போராட்டம்.எந்த இலாபத்தையும் எதிர்பாராமலும், உள்நோக்கம் இல்லாமல், தாழ்த்தப்பட்ட, தீண்டபடாத மக்களின் சுயமரியாதையை வென்றெடுக்க நடந்த போராட்டம்.

சாதி,மத,கடவுள் பெயரால் கடைபிடிக்கக்பட்ட தீண்டாமைக் கொடுமையைஅடித்து நொறுக்கிய ஆதிக்க ஒழிப்புப் போராட்டம்

சேலம் ரயில்வே கோட்டம் : “மலையாள” மார்க்சிஸ்ட்டுகள் ஓட்டம்...

சேலத்தை தலையிடமாகக் கொண்டு, ஒரு ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பலகாலமாக எழுப்பட்டு, அது நிறைவேறும் வேளையில், மலையாளிகளின் அடாவடியால் அதுவும் கையைவிட்டு போகும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே, முல்லைப் பெரியாறு நீர் சிக்கலில் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனின் அடாவடியால் கொதித்துப் போயிருந்த தமிழ்நாடு, சேலம் கோட்டத்திலும் இவர்கள் வேலை காட்ட ஆரம்பித்தவுடன் இவனங்களை ஏதாவது பண்ணணும் என்ற கோபம் கொழுந்து விட்டு எரிய, எரியும் கோபத்தில் எண்ணெய் விட்டார், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன்.

“பத்திக்கிச்சி” தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கேரளாவிற்குச் செல்லும், கேரளாவிலிருந்து வரும் ரயில்களை மறிக்கப் போவதாக அறிவித்தார். இன்னொருபுறம், கோவையில் மறியல், சேலம் கோட்ட பாதுகாப்புக் குழு தலைவரும், பெரியார் திராவிடர்க் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் அறிவித்தார். திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா அவர்கள் நெல்லையில் மறிக்கப் போவதாக அறிவிக்க, போராட்டத்தீ பரவியது.

இதனை எதிர்பார்க்காத மலையாளிகள், தங்களின் ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகனாய் விளங்கம் வி.எஸ்.அச்சுனாந்த சேட்டனிடம் ஓடி, “தமிழ்நாட்டு(பட்டி)” கருணாநிதிகிட்ட சம்சாரித்து ரயில ஓடவிடுங்கன்னு அழுதுப் புலம்ப, அச்சுனாந்த சேட்டனோ, “தமிழ்நாட்டு(பட்டி)” கருணாநிதி வேண்டாம். நம்ம மார்க்சிஸ்ட் (பட்டி) வரதராஜன் கிட்ட சொன்னா அறிக்கை விடும். ஆதரவு வாபஸ்னு மிரட்டும், நான் பார்த்துக்கறேன் என்று கூற மலைளயாளிகளுக்கோ மகிழ்ச்சி.

சொன்னபடி (மலையாள) கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில (நாடுன்னு போட்ட பிரிவினைவாதமாம்) செயலாளர் என்.,வரதராஜன் ஆகஸ்ட்-25-ல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அடடா, என்ன அருமையாய் விட்டுருக்கிறார். சில கண்டு பிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார். சேலம் கோட்டம் கோரிக்கை அப்பகுதி மக்களுடையதாம், சேலம் கோட்டம் அமைவதை கேரளா எதிர்க்கவில்லைனு லல்லு பிரசாத் சொல்றார்னு இவர் சொல்றார். சரி இவரோட கண்டு பிடிப்புகளைப் பார்ப்போம்.

சேலம் கோட்டம் என்பது தமிழ்நாட்டு மக்களின் ஏறக்குறைய 50 ஆண்டுகால கோரிக்கை. தமிழகப் பகுதியான கோவை போத்தனூரை தலையிடமாகக் கொண்டு இயங்கி வந்த போத்தனூர் இரயில்வே கோட்டம், மலையாள கோட்ட கண்கானிப்பாளர் ஒருவரால் ரகசியமாய், சட்ட விரோமாக கொண்டு செல்லப்பட்டு, பாலக்காடு ரயில்வே கோட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சுமார் 50 ஆண்டுகளாக தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கப்படுகிறது. ஒருவேளை பாலக்காட்டில் இருப்பதை சேலத்துக்கு மாற்று எனக் கேட்டு அதை அச்சுதானந்த சேட்டனும், அவரோட சேச்சிகளும் எதிர்த்தால் அதில் கூட ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், புதுசா ஒரு கோட்டம் தமிழ்நாட்டுல ஆரம்பிச்சா அதை எதிர்க்க, கப்பகிழங்கும், நேந்திரம் பழம் சிப்ஸ் சாப்பிட்டுட்டு வந்தா, காலம்காலமா காரம் சாரமா கருவாட்டுக் குழம்பு சாப்பிடும் தமிழ்நாட்டுகாரங்க ரயிலை மறிக்க போறம்னு கிம்பினா நம்ம தமிழ்(பிரிவு) மாநிலச் செயலாளரய்யா, என்(னமோ) வரதராஜன் கோபிச்சிக்கிறார்.

சேலம் கோட்டம் அமைவதை கேரளா எதிர்க்கவில்லைனு, லல்லு பிரசாத் சொல்லி இருக்கிறாராம். சரிங்க. அச்சுதானந்த சேட்டன் சொல்லலியே, அவர் வேணும் சொன்னாறா? அதுமட்டுமா சொல்றாரு, தமிழ்நாட்டு முதல்வர் “போக்கிரித்தனமான நடந்து கொள்கிறார்னு” கேரள போக்கிரி மன்னிக்கவும் முதல்வர் நம்ம சேட்டன் சொன்னாரே அப்ப நம்ம மார்க்சிஸ்ட் அய்யாவ, பொலிட்பிரோவுல வச்சி பூட்டிட்டாங்களா தெரியவில்லை. தெரிஞ்சவங்க யாராச்சும் சொன்னீங்கனா எல்லோரும் தெரிஞ்சிக்கலாம்.

தமிழர்களிடம் சந்தா வசூலித்து கட்சி நடத்தி மலையாளிக்கு ஆதரவா அறிக்கைவிடும் நம்ம அய்யாவ, மலையாள கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்னு சேலம் ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல உள்ள டீக்கடையில நாலு பேரு பேசிக்கினு இருந்தாங்க. அதனாலதான் நான் எழுதினேன் தவிர வேறொன்றுமில்லை. மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தமிழக முதல்வர் வேண்டுகோளின்படி போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டம் திறப்பு விழா திட்டமிட்டபடி நடக்கலனா போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது.