சரி வரலாற்றுக்கு ஆதாரமாய் (?) விளங்கும் கண்ணுக்குத் தெரியாத இராமன் பாலத்தை உடைப்பதை எதிர்க்கும் இவர்கள் நம் கண்முன் பாபர் மசூதியை உடைத்தவர்கள் தானே. இயற்கையாய் உருவான மணல் திட்டு, இராமன்பாலம் அது எங்கள் நம்பிக்கை, எனவே அதை உடைக்க கூடாது என்றால் மனிதர்களால் கட்டப்பட்ட பாபர் மசூதி கூடத்தான் இந்த நாட்டின் குடிமக்களில் பலரது நம்பிக்கை. ஏன் உடைத்தீர்கள்? என்று கேள்விகள் எழுப்புவோமானால் எங்கள் நம்பிக்கைக்கு எதிராய் எவர் வரினும் அவர் “காந்தியே, ஆனாலும் வாழவிட மாட்டோம்” என்று கொக்கரிகிறார்கள். இவர்களின் இராமனும், அவன் பாலமும் கற்பனையே என தொல்லியல் ஆய்வுத்துறை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூற கொதித்தெழுந்த கூட்டம், அதிகாரிகளைப் பணி நீக்கம் செய், பிரதமரும், சோனியாவும் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறிகிறார்கள். தமிழர்களின் நியாயமான கோரிக்கை இந்த இந்து மதவெறி கூத்தில் மறைக்கப்படும் கொடுமையைக் கண்டு நெஞ்சம் கொதிக்குது. சரி இவர்கள் கூறும் இராமனையும், இராமன் பாலத்தையும் பற்றி உண்மையைப் பற்றி கொஞ்சம் பார்போம்.
இராமாயணம் நடந்த கதையல்ல!
இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் வரலாறு இல்லை; உள்ள கதை அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல்லோகம் என்றம் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரத்துக்கு வழியும் இல்லை.
இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள் பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?
இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.
ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்திரிப்பதே இராமாயணம்.
இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தாமனதோ, நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு பெரும்கற்பனைச் சித்திரமும் அல்ல.
(வால்மீகி இராமாயணம் - சி.ஆர்.சீனிவாசய்ங்கார் மொழிபெயர்ப்பு)
இராமனைப் பார்க்க வந்த பரதனிடம் இராமன் கேட்கும்பொழுது, “பவுத்தன் சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல் கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும், பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் அவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அயோதித்தி காண்டம் 100 ஆவது சர்க்கம் 374 ஆவது பக்கம்)
இராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்பொழுது, “திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும், நாஸ்திகனுக்கம் பேதமில்லை” என்று சொன்னதாகக் குறிப்பிடபட்டுள்ளது.
(மேற்படி காண்டம் 106 ஆவது சர்ககம்; 412 ஆவது பக்கம்)
(சுந்தர காண்டம் 15 ஆவது சர்ககம் 69 ஆவது பக்கம்)
வாலியிடம் இராமன் கூறும்பொழுது “பூர்வத்தில் ஒரு பவுத்தசன்யாசி உன்னைப்போல் கொடிய பாவத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான்” என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.(கிஷ்கிந்தா காண்டம் 18 ஆவது சர்க்கம்; 69 பக்கம்)
இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது, “ வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள், புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின்மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்...முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும் கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் காட்டப்பட்டன” எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவ்வுலகத்தில் ஏற்பட்ட கடற்பெரு வெள்ளங்களின் (சுனாமி) காலங்கள் காட் எலியட் என்பவர் குறித்துள்ளபடி பார்க்கையில் பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு (10,00,000 ஆண்டுகளுக்கு) முன்னர் நேர்ந்துள்ள கடற்பெரு வெள்ளமே முதன்மையானதென்றும், இரண்டாவது வெள்ளம் எண்ணூறாயிரம் (8,00,000) ஆண்டுகளுக்கு முன் நேர்ந்திருக்கக்கூடும் என்றும், மூன்றாவது வெள்ளம் இருநூற்றாயிரம் (2,00,000) ஆண்டுகளுக்கு முன்னரும்; நான்காவது வெள்ளம் எண்பதினாயிரம் (80,000) ஆண்டுகளுக்கு முன்னரும், அய்தாவது வெள்ளம் ஒன்பதினாயிரத்து அய்நூறு (9,500) ஆண்டுகளுக்குச் சிறிது முன்னும் பின்னுமிருக்கலாமென்றும் அறியக் கிடக்கின்றன.
இவை எக்கேல், அக்கிசிலி, டோயினார்டு, பேர்கசன், சுவான்சு முதலியோர் தென்னாட்டின் தொன்மையைப் பற்றிக் கூறும் கருத்துகளாலும், நில நூல், தொல்லுயிர் நூல் முதலியவற்றின் சான்றுகளாலும், தென்னாட்டிற்கும், மேலை ஆசியாவிற்கும் கப்பல் வாணிபம் மிகப் பழைய காலத்தே நடந்ததாகத் தெரிய வருவதாலும், தமிழரின் ஒரு பகுதியாரே தென்னாட்டிலிருந்து அக்கோடியா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும் கொள்ளுதலே பொருத்தமுடைத்து. ஆரியர் வடமேற்கு வழியாக இந்தியாவிற்குள் புகுங்காலத்து பெலூசிஸ்தான் முதலிய இடங்களிலும், வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்பது அறிஞர் இராப்பன் என்பவர் கருத்தும் ஆகும்.
சுமார் கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளத்தின் பின்னேயே இலங்கையானது தமிழ் நாட்டினின்றும் பிரிவுபட்டதென்பர்.
காலஞ்சென்ற ஆசிரியர் கார்த்திகேய முதலியார், “குமரியாற்றுக்கும், பஃறுளியாற்றுக்கும் இடையிலுள்ள பெருவள நாடே பழந்தமிழ்நாடாகும். இது பெரியதொரு ஆற்றிடைக் குறையாதலின், இதற்கு அலங்கமென்றும் பெயராம், அலங்கம் லங்கையாயிற்று. அலங்கமெனினும் ஆற்றிடைக் குறையெனினும் ஒக்கும். இலத்தீன் மொழியில் இலங்கைக்கு டாப்ரோபேன் என்று பெயர். டாப்ரோபேன் என்பது தாமிரபரணி என்பதன் சிதைவு. கடல் கோளுக்குட்படாமுன் இலங்கைக்கு இப்பொழுது தென்பாண்டி நாட்டில் ஓடும் தாமிரபரணியின் பாய்ச்சலிருந்தமையால் அப்பெயர் வந்தது.” என்று அவர் இயற்றிய அரியமொழி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆராய்ச்சியாளருக்கும், தமிழ் நாட்டவருக்கும் பெருமையைக் கொடுப்பதொன்றாகும். காட்எலியட் என்பவர் கூறிய அய்ந்தாவது கடல் வெள்ளம் ஏறக்குறைய 9,500 ஆண்டுகளுக்கு முன்னேயே நிகழந்ததாகும். அங்ஙனமாயின் யாவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட முச்சங்கங்ளின் முதற்சங்கம் இக்கடல் வெள்ளத்துக்குமுன் குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த நாட்டில் நிறுவப்பட்டதாகும். இச் சங்கத்தை நிறுவிய மன்னர் காய்ச்சினவழுதி முதல் கடுங்கோன் மன்னர் வரை எண்பத்தொன்பது மன்னர் ஆவர்.
ஆராய்ச்சி உண்மை இவ்வாறு இருக்கையில், 21 லட்சம் (21,00,000) ஆண்டுகளுக்கு முன் இலங்கைத் தீவும், அயோத்தி நாடும் இருந்ததாகக் கூறும் இராமாயணக் கதை எவ்வளவு பெரிய பொய்க் கதையாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.தொடரும்...
2 comments:
தலைப்பிற்கேற்றவாறு தகவலை சுருக்கவும்.
சேதுசமுத்திர திட்டம் இராமர் பாலம் இது பற்றி மட்டும் கூறினால நன்றாக இருக்கும்.
இதில் புத்தர் பிறப்பு உள்பட இந்த தலைப்பிற்கு தேவையில்லாத பல தகவல்களை இங்கே அளித்துள்ளீர்கள்.
அதிக தகவல்கள் சரி எனினும் சுறுக்கமாக தரவும். தலைப்பிற்கேற்ப தரவும்.
நன்றி
ராமாயனம் படித்தவர்களுக்கே தெரியாத பல புதிய தகவல்களைத் தந்துள்ளீர்கள்.
Post a Comment